×

சென்னையில் 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பணம், நகை, போதைப்பொருட்கள் இதுவரை ₹9.90 கோடி பறிமுதல்: தேர்தல் விதிமுறை மீறலால் நடவடிக்கை

சென்னை, ஏப்.4: சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை ரூ.9.90 கோடி மதிப்பிலான பணம், நகை, போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16ம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, பொது இடங்களிலிருந்த 63,482 சுவர் விளம்பரங்கள், 14,237 சுவரொட்டிகள், 608 பதாகைகள் மற்றும் இதர வகையான 2050 விளம்பரங்கள் என மொத்தம் 80,377 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், தனியார் இடங்களில் இருந்த 5,643 சுவர் விளம்பரங்கள், 7,974 சுவரொட்டிகள், 612 பதாகைகள் மற்றும் இதர வகையான 1,160 விளம்பரங்கள் என மொத்தம் 15,389 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

மேலும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பாக முறையாக ரசீது இல்லாமல், ரூ.5,62,21,223- மதிப்பிலான 8589.16 கிராம் தங்கம், ரூ.3,63,36,061 மதிப்பில் பணம், ரூ.15 லட்சம் மதிப்பில் 12 ஐ போன்கள், ரூ.7.50 லட்சம் மதிப்பில் 25 மடிக்கணினிகள், ரூ.14,16,700 மதிப்பிலான 131.6725 கி.கி. போதைப் பொருட்கள், ரூ.28,74,509 மதிப்பிலான 1,624.28 லிட்டர் மதுபானம் என மொத்தம் ரூ.9,90,98,493 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக பொது இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பாக 9 வழக்குகள், தனியார் இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பாக 2 வழக்குகள், விதிமீறல்கள் (Major Violation) தொடர்பாக 10 வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் இருக்கும் பட்சத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண்கள் 1950 மற்றும் 1800 425 7012 மற்றும் 044-2533 3001, 2533 3003, 2533 3004, 2533 3005, 2533 3006 ஆகிய எண்களிலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சி-விஜில் (C-Vigil App) மொபைல் செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

The post சென்னையில் 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பணம், நகை, போதைப்பொருட்கள் இதுவரை ₹9.90 கோடி பறிமுதல்: தேர்தல் விதிமுறை மீறலால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...